மதுரை கீழமாரட் வீதி நவநீத கிருஷ்ணன் பஜனை கூடத்தின் சார்பில் கள்ளழகருக்கு வர்ண குடை எடுத்து வரும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வர்ணக்குடையானது 4 மாசி வீதிகளின் வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்றடைந்தது.
அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வர்ணக்குடை புறப்பாடாகி அழகர்கோவிலுக்கு பக்தர்களுடன் பதினெட்டாம்படி கருப் பணசாமி கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து கோவில் வெளிபிரகாரம், நந்தவனம் சுற்றி வந்து ஆண்டாள் சன்னதியை வந்து சேர்ந்த பின்னர் அங்குள்ள சன்னதி முன்பாக இந்த வர்ண குடை வைக்கப்பட்டு நூபுர கங்கை, புனித தீர்த்தத்தால் சுவாமிக்கு பூஜைகள், மேளதாளம் முழங்க நடந்தது. ஏற்கனவே மண்டப வளாகத்தில் கருட வாகனத்தில் எழுந் தருளியிருந்த கள்ளழகர், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு சிறப்பு அலங்காரத்தில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகளுடன் வர்ணக்குடை சாத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.