திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜன் பேட்டை தெருவில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.அதேபோன்று ஆவணி ஞாயிறு மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.நோய்வாய்ப்பட்ட பக்தர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் ஆலயத்தில் தங்குவதாக அம்மனை வேண்டிக் கொள்வர். இவ்வாறு இரவு நேரங்களில் தங்க உரிய இடம் இல்லாத நிலையில் அப்பகுதியில் மூடப்பட்ட வணிக நிறுவனங்களில் வளாகத்தில் படுத்து உறங்குவர். பக்தர்கள் நலம் கருதி இளைப்பாறும் மண்டபம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந் நிலையில் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த திருமண மண்டபத்தை இடித்து விட்டு அதே இடத்தில் ரூபாய் ஒரு கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 2022-2023- ஆம் ஆண்டிற்கான திருக்கோயில் நிதி மூலம் தரைத்தளம் மற்றும் மேல் தளத்துடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவு பெற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கும் வர உள்ளது.