திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் போலீஸ் துறை சமூக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடி பகுதியில் இருவழி சாலையில் விபத்துக்களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதற்கு சற்று காலதாமதம் ஆகும். மேம்பாலம் கட்ட மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்க போலிஸ் துறைஅக்கறையுடன் செயல்படுகிறது.
ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்கு சாதாரண நாட்களிலும், விசேஷ காலங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க இடம் கொடுத்தால் புறக் காவல் நிலையம் அமைக்கப்படும். அதுவரை இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்றங்கள் குறைந்து உள்ளது.
குற்றங்கள் குறைய பொதுமக்கள் போலீசு துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
கூட்டத்தில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி,ஆலங்குடி வர்த்தக சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.