விருதுநகர் தென்காசி மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு சிவகங்கை ஆண்டிபட்டி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்! விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை!
விருதுநகர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் என் ஏ ராமச்சந்திர ராஜா சர்க்கரை ஆலைகளின் இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
” கடுமையான நிதிநெருக்கடியின் காரணமாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை, தனது அரவையை கடந்த 2021ம் ஆண்டு நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் தங்களுடைய பெரும் முயற்சியின் காரணமாக அவ்வருடத்தில் பதிவு செய்த கரும்புகள் முழுவதும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விவசாயிகளால் அருகிலுள்ள சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை யூனிட்டுக்கும், ஆண்டிபட்டி வைகை அணை பகுதியிலுள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 2024 ம் மாதம் மேற்படி தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகைகள் முழுவதையும் வழங்கிவிடுவதாகவும், வரக்கூடிய 2025 ஆண்டு தனது அரவையை துவங்க உள்ளதாகவும் கூறியது. மேற்படி ஆலைகளின் அலுவலகத்தை எங்கள் பகுதியிலிருந்து வெளியேற்ற நிர்ப்பந்தபடுத்தியதின் அடிப்படையில் மேற்படி ஆலைகளும் தங்களது செயல் பாட்டினை எங்களது விருதுநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளில் அறவே நிறுத்திவிட்டு கரும்பு பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
தற்பொழுது தரணி சர்க்கரை ஆலை அறிவித்தது போன்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகை முழுவதையும் நவம்பர் மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்கப்பட வேண்டும். ஆனால் 50 சதவிகிததொகை மட்டும் கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள தொகை எப்பொழுது கொடுக்கப்படும் என எந்தவித உறுதிப்பாடும் வழங்கப்படாத நிலையில் எங்கள் பகுதி கரும்பு விவசாயிகள் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினை நம்பி மீண்டும் தங்களது கரும்புகளை வருகிற 2025ம் ஆண்டு அரவைக்கு அனுப்பமறுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆலை நிர்வாகமும் எவ்வித ஒரு தெளிவான நடவடிக்கையையும் எடுக்காமல் விவசாயிகளுக்கு தர வேண்டியபாக்கித் தொகையையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமலும் காலம் தாழ்த்திவருகின்றனர். கடந்த 4 வருடங்களாக இயக்கத்தில் இல்லாத அவர்களது ஆலையையும் அரவைக்குதயார் செய்ய எந்த விதஏற்பாடுகளும் செய்யாமல் இருக்கும் நிலையில் அங்குபணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக மாதசம்பளமே வழங்க முடியாத நிலையில் மேற்படி நிர்வாகம் எவ்வாறு தனது ஆலையின் அரவையை துவங்கும்? என்கிற பெரிய ஐயப்பாடு விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து கரும்பு விவசாயிகள் மத்தியிலும் நிலவிவருகின்றது. கடந்த ஜூன் மாதம் வரை எங்கள் பகுதியில் ஆரோக்கியத்துடன் இயங்கிவந்த மேற்படிஇரு சர்க்கரை ஆலைகளும் கடந்தவருடம் நவம்பர் மாதம் முதல் அறுவடை செய்யப்பட்டுவந்த கரும்புகளை பதிவு செய்து உள்ளது. இக்கரும்புகள் வருகிற நவம்பர் மாதம் துவங்கி அறுவடைக்கு முதிர்ச்சியடைந்து தயாராகி விடும் நிலையில் மேற்படி கரும்புகளை நாங்கள் எங்கு பதிவு செய்து அனுப்புவது என்ற குழப்பநிலையில் இருக்கின்றோம். இச்சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் பிப்ரவரி, மார்ச், மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கரும்புகளை காலத்தில் வெட்ட முடியாமல் தேக்க நிலை உருவாகி விவசாயிகள் மத்தியில் பெரும் நெருக்கடியை கடந்த 2022 ம் ஆண்டு ஏற்படுத்தியது போல் உருவாகிவிடும் என்கிற அச்சம் எங்கள் அனைவரது மனதில் நிழலாடுகிறது. எனவே ண சர்க்கரைதுறை இயக்குநர் மற்றும் கரும்பு ஆணையாளர்
இந்த விஷயத்தில் உடன் தலையிட்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பதிவு செய்த கரும்புகளை டிசம்பர் மாதம் துவங்கி அறுவடை செய்து அருகிலுள்ள இரண்டு தனியார் ஆலைகளுக்கும் வழங்க உத்தரவிட்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டுகிறோம். எங்களுக்கான பழைய கரும்புத் தொகை முழுவதையும் தரணி சர்க்கரை ஆலை வழங்கிய பின்பு அவர்களது ஆலையையும் பழுதுகள் நீக்கிதயார் செய்தவுடன் எங்களது கரும்புகளை இங்கு அனுப்ப உத்தரவிடுமாறும், அதுவரை எங்களது கரும்புகள் மேற்படி 2 சர்க்கரை ஆலைகளுக்கும் அரைவைக்குச் செல்ல அனுமதிக்குமாறும் இப்பகுதி விவசாயிகள் முழுவதும் கேட்டுக்கொள்கிறோம்.
இது சம்பந்தமான எங்களது கோரிக்கைகளை மேற்படி விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நாங்கள் முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் எங்களது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளோம் என்பதனையும் தங்களது மேலானபார்வைக்கு பணிவுடன் தெரிவித்துக்
கொள்கின்றோம்.