எஸ், செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே செம்மங்குடியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் சேரும் சகதியுமான மண் சாலையில் நடவு நடும் போராட்டம். விரைந்து சாலை அமைக்க கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2000 ஆவது ஆண்டு இப்பகுதியில் வசித்த 35 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக வீட்டு மனை வழங்கப்பட்டு தெரு உள்ளே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்வதற்கு இணைப்புச்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தனியார் இடத்தின் வழியே சென்று வந்தனர். இந்நிலையில் தனியார் இடத்திலும் வீடு கட்டப்பட்டதால் தங்கள் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சாதாரண மழை பெய்தால் கூட சேரும் சகதியுமாக மாறும் சாலையை கடந்து வீடுகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமான முகப்புச் சாலையில் இன்று நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விரைந்து சாலையை அமைக்க வேண்டும் எனவும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அறிவித்து கலைந்து சென்றனர்