வடகிழக்கு பருவமழை துவங்கிய 11 நாட்களில் சிங்கம்புணரி பாலாற்றில் இரண்டாவது முறையாக செந்நிறத்தில் வெள்ளப்பெருக்கு,

நீர் நிலைகள் நிறைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது முறையாக கரை புரணடு ஓடுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள கரந்தமலையில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆர்பரித்து செல்கிறது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக இருந்தே தொடர்ச்சியாக சிங்கம்புணரியில் மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியதற்கு முன்பாக பெய்த கனமழைக்கு பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

மீண்டும் இன்று இரண்டாவது முறையாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கம்புணரி தாலுகாவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட கண்மாய்,குளங்கள் குட்டைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இன்றும் சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து கண்மாய்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பாலாற்றில் மூன்று முறை வெள்ளப்பெருக்கும்,கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சிங்கம்புணரி பகுதியில் குறைவான அளவே மழை கிடைத்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு பருவமழை துவங்கிய 11 நாட்களில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய் குளம் குட்டைகள் வேகமாக நிரம்பி வருவதால் விடுமுறை நாட்களில் குழந்தைகள் நீர் நிலைகளுக்கு செல்லாமல் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணித்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *