நடவடிக்கை எடுக்காத மத்தூர் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியல்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்,(48). ஓட்டுனரான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (65) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செய்தில்நாதனின் தாயார் வசந்தா சுப்பிரமணியை தாக்கியதாக மத்தூர் காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது மகள் சோபனா ஆகிய இருவரும் சேர்ந்த வசந்தாவை தாக்கியதாகவும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் செந்தில்நாதனின் செல்போனை பிடுங்கிய சுப்பிரமணி அவரை கடுமையாக தாக்கியதாக ஒரு மனுவும் அளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (27.0.2024) மதியம் சுப்பிரமணி வீட்டின் வழியாக செந்தில்நாதன் சென்றபோது, சுப்பிரமணி அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதுசம்மந்தமாக புகார் அளிக்க வந்த செந்தில்நாதனின் புகாரை மத்தூர் காவல் துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்திநாதனின் உறவினர்கள் புகாரை ஏற்க மறுத்த காவல் நிலையத்தை கண்டித்து திருப்பத்தூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனுவை ஏற்றுகொள்வதாக உறுதியளித்ததை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.