மதுரை சமயநல்லூர் அருகே தங் களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுநாயக்கர் சமூகத்தினர் இன்று 3 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை அருகே சமயநல்லூர், பரவை சத்திய மூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டு களாக வருவாய்த் துறையினர் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை . இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி வளாகம் முன் உள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று 3 வது நாளாக சனிக்கிழமையும் தங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகன்றனர்.