ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கோவையில் 600 பைக் ஓட்டுனர்கள் கலந்து கொண்ட மாபெரும் பைக் பேரணி!
சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த மாபெரும் பைக் பேரணி நிகழ்வை ஆனமலைஸ் நிறுவனம் மற்றும் உயிர் அறக்கட்டளை இணைந்து கோயம்புத்தூர் விழா 2024ன் ஒரு அங்கமாக இன்று பைக் பேரணி நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் (சென்ட்ரல்) எதிரே உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த பேரணி துவங்கியது. இதில் 600 பேர் தங்களது இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து, கொடிசியா மைதானம் வரை நிதானமாக பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியை கோவை மாநகர காவல் துறையின் ஆர்ம்ட் ரிசர்வ் பிரிவின் துணை ஆணையர் ராஜ்கண்ணா; போக்குவரத்துத் துணை ஆணையர் அசோக்குமார்; மற்றும் போக்குவரத்துக் கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன், துணைத் தலைவர்கள் சௌமியா காயத்ரி மற்றும் சரிதா லட்சுமி, உயிர் அறக்கட்டளையின் பறங்காவலர் சந்திரசேகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சுப்பிரமணியன் மற்றும் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் பொறுப்பாக சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை இயக்குவது குறித்த விழிப்புணர்வையும் இந்த 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாதையில் பேரணியாக சென்று வாகன ஓட்டிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இந்த பேரணியை நடத்துவதற்காகவும் இளைஞர்கள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் எடுத்ததற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கோவை மாநகர காவல் துறையின் ஆர்ம்ட் ரிசர்வ் பிரிவின் துணை ஆணையர் ராஜ் கண்ணா பாராட்டினார்.
போக்குவரத்து துறை கூடுதல் துணை ஆணையர் அசோக்குமார் பேசுகையில், வாகனங்களை வேகமாக இயக்குவது தான் பயணத்தை இனிமையாக்கும் என்று எண்ணக்கூடாது. அதை நிதானமாக இயக்கினாலும் அந்தப் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும் என்றார்.
இளைஞர்கள் சாலைகளில் செல்லும் பொழுது பொறுப்புடன் வாகனத்தை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கும் பாதுகாப்பான சூழலை சாலைகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.