எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் ரூபாய் 8.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி. கட்டுமான பணிகள் தரமின்றியும், காலதாமதமாக நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட சீர்காழி புதிய பேருந்து நிலையம் ரூபாய் 8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்தின் ஒருபுறம் பணிகள் முடிந்த நிலையில் மறுபுறம் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இதனால் இருபுறம் வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் ஒரு பக்கமாக வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கட்டுமான பணிகள் தரம் இன்றி நடைபெறுவதாக குற்றம் சாட்டியும் பணியை தரமாகவும் விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரமோகன் மற்றும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் அதிமுக தொண்டர்கள் வர்த்தக சங்கத்தினர் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலைவரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் தரமான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும் உறுதியளித்தனர் அதனை ஏற்று அதிமுகவினர் கலைந்து சென்றனர்.