நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி : நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகல்.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான வினோத்குமார் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்ட 2010-ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து பல கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காக பல லட்சங்கள் செலவழித்தோம்.
ஆனால், கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருகிறார். இது பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் சர்வதிகாரி போல் நடந்து கொள்வதாகவும், இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக இதே போக்கு நிலவி வருவதால் அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம் என தெரிவித்தார்.
இவருடன்
விவசாய அணி செயலாளர் அங்கமுத்து, மகளிர் பாசறை செயலாளர் வள்ளி, மோகனூர் நகர செயலாளர் செந்தில்குமார், நாமக்கல் தொகுதி செய்தி தொடர்பாளர் அருண்குமார், நாமக்கல் இளைஞர் பாசறை செயலாளர் பொன்வேல் என 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.