திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் துளிர் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக, வலங்கைமான் ஒன்றிய அளவில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு துளிர் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் தெய்வ. பாஸ்கரன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வினை அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம். எஸ். ஸ்டீபன்நாதன் வெகு சிறப்பாக நடத்தினார். வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் என்.எஸ் சுகந்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ். ரவிச்சந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாவதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.
இதில் 14 பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் அறிவியல் சார்ந்த வினாடி வினா கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ஊட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கடைசியில் உரையாற்றிய வட்டார கல்வி அலுவலர் என்.எஸ். சுகந்தி, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் எஸ். ரவிச்சந்திரன் உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.
வட்டார செயலாளர் நிர்மல் ராஜ், வட்டார பொருளாளர் பி. பிரபாகரன்,மாவட்ட இணை செயலாளர்கள் டி. பெருமாள்ராஜ், பி. விஜய், வானவில் மன்ற கருத்தாளர் சதீஷ் மற்றும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளை சார்ந்த அறிவியல் ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார்கள்.