கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் Hearing for Life Foundation இணைந்து நடத்தும் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டத்தின் துவக்க விழா இன்று (06/12/2024) தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார். மேலும், பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் ஆய்வு மைய அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் யாழினி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், மருத்துவர் பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்கள் கலைஞர் பற்றிப் பேசும்போது, ‘கலைஞர் எங்களில் ஒருத்தர், எங்கள் சகோதரர்களைப் போன்ற ஒரு தலைவர்’ எனப் பெருமையோடு கூறினார். கலைஞரின் கனவுத் திட்டம் தான் இந்த பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டம்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செவித்திறன் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வார்கள். பரிசோதனைக்குப் பிறகு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னால், பல குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் அது விதி. அதை மாற்றக்கூடாது என்றும், அந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்யக்கூடாத என்றும் வலியுறுத்தும் பல நிகழ்வுகளை மருத்துவர்கள் பார்த்துள்ளார்கள். இந்த சூழ்நிலைகளால் குழந்தைக்கு மறுபடியும் பரிசோதனை மேற்கொள்வதில்லை.

இன்று நான் தொடங்கியுள்ள காது கேட்கும் திறனை ஆரம்பக்காலத்தில் கண்டறிதல் (early intervention), பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டம். ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கருவி, எவ்வளவு சத்தம் கேட்கிறது என்று பிறந்த குழந்தைக்குப் பரிசோதனை செய்ய முடியும் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இன்று எடுக்கக்கூடிய இந்த பரிசோதனைக்குப் பிறகு சென்னையில் உள்ள மருத்துவமனையில் இந்த தரவுகள் சேகரித்து வைக்கப்படும்.

அவர்கள் திரும்பி சிகிச்சைக்கு வருவது இல்லை என்றாலும், நம்மிடம் உள்ள தரவுகள் மூலம் கிராமங்களில் உள்ள மருத்துவர், செவிலியர்களைத் தொடர்பு கொண்டு ஏன் குழந்தைகள் சிகிச்சைக்கு வரவில்லை எனக் கேட்கப்படும். அந்த குழந்தைக்குச் சிகிச்சை முடிந்த பிறகும், தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் அவர்களைத் தொடர்பில் வைத்திருக்கக் கூடிய திட்டம் தான் இது.

இந்த திட்டத்தை அடுத்த கட்டமாகத் தமிழ்நாடு முழுவதும் நிச்சயமாகக் கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம். குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, செவித்திறன், பேசும் திறன், கற்றல் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *