வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
அதிரடி காட்டிய துறையூர் போலீசாருக்கு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு நல சங்க நிறுவனர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் ஆளுயர மாலை அணிவித்து வெகுவாக பாராட்டு
துறையூர் டிச-08
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தனியாக இருந்த பெண்ணிடம் 11 பவுன் தங்க தாலிக்கொடியினை பறித்து கொண்டு டூவீலரில் தப்பிச் சென்ற இரண்டு இளைஞர்களை துறையூர் போலீசார் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்தனர்.நகை திருடியவர்களை ஒரே நாளில் கைது செய்த துறையூர் போலீசாருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதுடன், கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்க மாநில பொது செயலாளர் மற்றும் நிறுவனர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் பூவிளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(55). இவரது மனைவி பொன்மலர்(50). இவர்கள் துறையூர் அருகே சர்.பி.டி. தியாகராயர் நகர் பகுதியில் பட்டி அமைத்து ஆடுகள் மேய்த்து வருகின்றனர்.கடந்த 4ந் தேதி மாலையில் ராமர் ஆடு மேய்க்க சென்றிருந்த போது ஆட்டுப்பட்டியில் தனியாக இருந்த பொன்மலரை இரண்டு இளைஞர்கள் கம்பியால் பின்னந்தலையில் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க தாலிக்கொடியினை பறித்துக் கொண்டு தாங்கள் டூவீலரில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக பொன்மலர் அளித்த புகாரின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் தனி படை அமைத்து பொன்மலர் கூறிய அடையாளத்தை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.நேற்று முன்தினம் பெரம்பலூர் பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் சந்தேகப்படும்படியாக வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, துறையூர் நடராஜர் காலனியைச் சேர்ந்த ராஜா மகன் சூரியா(21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மகன் சுகுமார்(19) என்பதும், இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு துறையூர் பகுதியில் பட்டி அமைத்து ஆடு மேய்க்கும் பொன்மலரிடம் நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. உடனே போலீஸார் இருவரையும் அதிரடியாக கைது செய்து 11 பவுன் தங்க தாலி கொடி, திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். நகை திருடியவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொது செயலாளர் மற்றும் நிறுவனர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் தலைமையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கணேசன், சசிகுமார் ,வேலு, நீலமேகம், முருகன், நல்ல கருங்கு, தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் குமார், ரவிச்சந்திரன், ஏட்டு முருகானந்தம் உள்ளிட்ட போலீசாருக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
அப்போது பேசிய கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்க மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன், சாதாரண மக்கள் என்று பார்க்காமல் புகார் அளித்த ஒரே நாளில் நகை திருடியவர்களை துரித நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் நகை திருடியவர்களை கைது செய்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட தனிப்படையினருக்கு எங்களது பாராட்டுகளை மனதார தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
நன்றி தெரிவித்துப் பேசிய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இது போன்ற பாராட்டுக்களால் போலீசாருக்கு உத்வேகம் ஏற்படும் என்றும், பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமும் ,போஸ்டர் மூலமும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இன்னும் சிலர் அறியாமை காரணமாக பாதுகாப்பில்லாமல் தங்க நகைகளை அணிந்து வருகின்றனர்.
தனியாக வீட்டில் இருக்கும் பெண்களும் பாதுகாப்பு இல்லாமல் நகைகளை அணிந்து வருகின்றனர். தயவுசெய்து பெண்களும் பொதுமக்களும் விலை உயர்ந்த தங்க நகைகளை பாதுகாப்போடு அணிந்து செல்லவும், தனியாக இருக்கும் பெண்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்