ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி ராஜாஜி நினைவு இலவச மருத்துவ மனைக்கு ரூ.15- லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ்! தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வழங்கினார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பகுதியில் கொம்மந்தாபுரம் மிராசு பார்த்தசாரதி அறக்கட்டளை சார்பில் மூதறிஞர் ராஜாஜி இலவச பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ராஜாஜியின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இம்மருத்துவ மனைக்கு ரூ.15- லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி அர்ப்பணித்தார்.
இதற்கான விழா முகவூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அறக்கட்டளை உறுப்பினருமான லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாகி ராஜாராம் வரவேற்றுப் பேசினார்.
அறக்கட்டளை உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கட்ரமணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால், மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் பேசிய ஜி. கே. வாசன், எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 100 சதவீதம் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். சிறியதாக இருந்தாலும் மேலான நிம்மதியை தருகிறது.
இந்திய அளவில் மட்டும் இன்றி உலக அரங்கிலேயே ராஜாஜி ஒரு சிறந்தவர். சிறந்த ராஜதந்திரி. தேசபிதா காந்தி கூட ராஜாஜி எனது மனசாட்சி என்று கூறினார். கிராமப்புறங்களுக்கு இந்த மருத்துவமனை மூலம் சிறந்த அளவிலான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்ட த்தக்கது.
தியாகி லட்சுமி காந்தன் பாரதியின் நூற்றாண்டு விழா அடுத்த வருடம் நடைபெற உள்ளது. சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது,” புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு முதல் கட்டமாக மத்திய அரசு ரூ. 944- கோடி உடனடியாக விடுவித்துள்ளது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தி வருகிறது. 2026 தேர்தலை எதிர்நோக்க தயாராக இருந்து வருகிறோம். 2026 தேர்தலில் வாக்களிக்க போவது வாக்காளராகிய. மக்கள் தான். ஆளும் திமுக அல்ல. வெற்றியை நிர்ணயம் செய்யப் போவதும் பொதுமக்கள் தான்- இவ்வாறு ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.