இயற்கை சாயங்கள் மற்றும் கைத்தறி துணிகளில் உள்ள புதுமைகள் மற்றும் சவால்களை ஆராயும் நோக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி பகுதியில் செயல்படும் பிரபல குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.சி.டி) இன்று (13.12.24) இயற்கை சாயங்கள் மற்றும் கைத்தறி ஜவுளிகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.
கல்லூரியின் ஃபேஷன் தொழில்நுட்பத் துறை, கே.சி.டி. பிசினஸ் ஸ்கூல் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராக, இந்தியாவின் பெருமைமிகு ஐ.ஐ.டி டெல்லி கல்வி நிறுவனத்தின் ஜவுளி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீப்தி குப்தா பங்கேற்று, இயற்கை சாயங்களில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், இயற்கை சாயங்களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் முக்கிய சவால்களை பற்றி எடுத்துரைத்தார். நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், இயற்கை சாயப் பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் தரப்படுத்தப்பட்ட தர அளவுருக்கள் மற்றும் சான்றிதழ் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என கூறினார்.
இந்திய அரசின் தர மேம்பாட்டுக்கான தேசிய வாரியத்தின் (NBQP) ஆலோசகர் திரு சி. வேணுகோபால்; கொல்கத்தாவிலுள்ள ஜே.டி.பிர்லா இன்ஸ்டிடியூட்டின் முதல்வர், டாக்டர் தீபாலி சிங்கீ; கே.சி.டி.யின் பேஷன் டெக்னாலஜி துறை பேராசிரியர் மற்றும் AICTE IKS திட்ட முதன்மை ஆய்வாளர் டாக்டர் ஜி ராமகிருஷ்ணன் மற்றும் கே.சி.டி.பிசினஸ் ஸ்கூல்லின் தலைவர் டாக்டர் மேரி செரியன் இந்த மாநாட்டின் துவக்க நிகழ்வில் உரையாற்றினார்.
130 பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில்கலந்து கொண்டனர். இதில் 75 ஆராய்ச்சி சுருக்கங்கள் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில், ஆய்வு சுருக்கங்களின் புத்தகத்தை இந்திய அரசின் தர மேம்பாட்டுக்கான தேசிய வாரியத்தின் (NBQP) ஆலோசகர் திரு சி. வேணுகோபால் வெளியிட முதல் பிரதிகளை டாக்டர் தீப்தி குப்தா மற்றும் டாக்டர் தீபாலி சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக, KCT பேஷன் டெக்னாலஜி துறைத் தலைவர் டாக்டர் ஆர் பிரியதர்ஷினி வரவேற்புரையாற்றினார், நன்றியுரையை KCT வணிகப் பள்ளியின் பேராசிரியர் டாக்டர் பி. பூங்கொடி மற்றும் ஆராய்ச்சி கூட்டாளர் செல்வி R. ஸ்ரீ கணப்ரியா ஆகியோர் வழங்கினர்.