வருடம் தோறும் டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 24 ஆம் தேதி நள்ளிரவு சிறப்பு கிறிஸ்மஸ் திருப்பலி நடைபெறும். திண்டுக்கலில் 96 கிராமங்களின் தாயகமாக விளங்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமை புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருட்தந்தை அருமை சாமி தலைமையில் பங்குத்தந்தை செல்வராஜ்,உதவி பங்குத்தந்தை அந்தோணிசாமி, அருட்தந்தையர்கள் பீட்டர் ராஜ், லாரன்ஸ், ஆரோக்கியசாமி,ஜான்சன் ,சாம்சன் ஆகியோரால் சிறப்பு கிறிஸ்மஸ் பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வால் நட்சத்திரம் கோவில் நுழைவாயில் முன்புறம் இருந்து தோன்றி ஆலய பலி பீடத்தை சென்றடைந்த பின் மனித பாவங்களை மீட்பதற்காக குழந்தை இயேசு பாவ மீட்பு புனித நீர் தொட்டியில் இருந்து பிறப்பது போன்று வித்யாசமான முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குழந்தை இயேசு பிறந்த போது ஆலயத்திலிருந்து அனைவரும் கரவொலி எழுப்பியும் கைதட்டியும் உற்சாகமாக வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த கிறிஸ்மஸ் திருப்பலியில் திருத்தொண்டர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தில் உள்ளே சிறப்பாக குடில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய அலங்கார குழுவினர் செய்திருந்தனர்.