திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 5 பேர் தற்கொலைக்கு முயன்றதால் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் .

இதில் உச்சக்கட்டமாக கடந்த 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை, ஒரு நபர் வாய்க்கு வந்ததெல்லாம் ஆவேசமாக பேசியது, பலருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டது.

தன்னுடைய பூர்வீக நிலத்தை அளவீடு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக கண்ணீருடன் சொன்னார்.இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில், கொசவப்பட்டியை சேர்ந்த அருள் ஆனந்தம் பாஸ்கர் 48, உறவினர் ஜேசுதாஸ் 55, தம்பி சவரிமுத்து 50 என 3 பேருமே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இவர்களையும் போலீஸார் மீட்டனர்.

இவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக சொன்னார்.அதே நேரத்தில் காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமுருகன் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்தனர்.

தீக்குளிக்க முயன்ற 5 பேரையும் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த பரபரப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, முருகன் என்ற 60 வயது நபர் ஆவேசத்துடன் அதிகாரிகளை திட்ட துவங்கினார்.

எரியோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது சகோதரர் சீனிவாசன் வீட்டை போலி ஆவணங்கள் மூலமாக இடித்த அதே பகுதியை சேர்ந்தவர் மீதும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி 2016 ல் தாசில்தார் அலுவலகத்தில் மனு தந்துள்ளார்.ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை இல்லை: இதுகுறித்து எரியோடு தாசில்தார் அலுவலகத்தில் கேட்டதற்கு, மனுவை காணவில்லை என்று சொன்னார்களாம். பல வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான முருகன், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்த குறை தீர் கூட்டத்துக்கு வந்திருந்தார்மனு கொடுக்கும் இடத்தில் வரிசையில் நின்ற அவர், அரசு அதிகாரிகளை கடுமையாக குற்றஞ்சாட்டி சத்தமாக திட்ட ஆரம்பித்தார்.

“எத்தனை வருஷமா மனு கொடுக்குறது? 8 வருஷமா போராடிட்டு இருக்கேன். அதிகாரிகள் நிர்வாகம் செய்வது சரியில்லை. எங்களை தூக்கில் போடுங்கள். நீங்களெல்லாம் எங்களுடனேயே இருந்து, வாழ்ந்துகிட்டு ஒன்னும் செய்யல.சுதந்திரத்திற்காக உயிரை விட்டவன் எல்லாம் எங்கே போறது? திருட்டு பத்திரத்திற்கு மனு கொடுத்தவனுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது.

8 வருஷமாக போராடி, என் படிப்பு, வாழ்க்கை எல்லாமே போச்சு. ஒவ்வொரு அதிகாரிக்கும் 150 முறைக்கு மேல் மெயில் அனுப்பியிருக்கிறேன். யாரும் காது கொடுத்து கேக்கல.. நான் படித்தது எதற்காக? சீ… கேவலம்பொய் பொய்: நீங்கெல்லாம் படித்துதான் வேலைக்கு வந்திருக்கீங்களா? என் வயிறு எரியுது… என் தூக்கமே போச்சு. 30 வருட படிப்பு போச்சு. தெருத் தெருவாய் அலைஞ்சி, 10 ரூபாய் சம்பாதிச்சு படிச்சேன். ஊழல் வேற பெருத்து போயிடுச்சு.. அதிகாரிகளே என்னை தூக்கில் போட்டுருங்க.. எல்லா இடத்திலும் பொய்தான்… தமிழகத்தில் நிர்வாகமே சரியில்லை.நான் அரசியல்வாதியை குறை சொல்ல மாட்டேன். அதிகாரிகள் தான் நிர்வாகம் பண்றீங்க.. மனு கொடுத்தா மனுவ காணோம்ன்னு சொல்றீங்க? உங்களின் காலை கழுவி குடிக்க வேண்டுமா? இனிமே ஆபீசுக்கு வராதீங்கனு சொல்லிடுங்க. இல்லனா பணக்கட்டோட வாங்கனு சொல்லுங்க.. CA படிச்ச முட்டாள் நான். மோசமான நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன். பூராம் பொய். பூராம் நாடகம்… இங்க அதிகாரிகள் ரொம்ப மோசம்,” என்று ஆவேசமாகவும், சத்தமாகவும் திட்டி தீர்த்தார்.ஆவேச பேச்சு: முருகன் இப்படி கொந்தளித்து பேசியபோது மனு கொடுக்க வந்த சிலரும் அவருக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டார்கள். ஆனால், முருகன் சுத்தமாக பேசவும், அங்கிருந்த பெண் போலீஸ் அவரை தடுக்க முயற்சித்தார். முருகனை தனித்துணை கலெக்டர் கங்காதேவியிடம் போலீசார் அழைத்து சென்றனர். ஆனாலும் முருகன், ஆவேச குரலில் தன்னுடைய குறைகளை சொல்லி கொண்டேயிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *