தமிழகத்தின் அழகிய மலைவாசஸ்தலமான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆம்! தற்போது கொடைக்கானலில் உறைபனி சீசன் துவங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல மாயாஜாலமாக காட்சியளிக்கிறது!
கொடைக்கானல் செல்ல இதுவே சரியான நேரம் என்று சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்!’மலைவாசஸ்தலங்களின் இளவரசி’ என்று பிரபலமாக அறியப்படும் கொடைக்கானல் இந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக தனித்து நிற்கிறது. அழகிய நிலப்பரப்பு, அமைதியான சூழல் மற்றும் இதமான காலநிலைக்கு பெயர் பெற்ற கொடைக்கானல் ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
கொடைக்கானலில் தற்போது குளிர் அலைகள் நிலவி வருவதால், புல் மற்றும் தாவரங்களில் உறைபனி உருவாகிறது. இந்த நிகழ்வு குளிர்காலத்தின் தொடக்கத்திற்கு காரணமாக உள்ளது, இதன் விளைவாக இப்பகுதியில் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆனால், தற்போது தாமதமாகவே உறை பனி தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் தான் இப்படி இருக்கும். ஆனால் தற்போது கொடைக்கானலிலேயே அப்படித் தான் உள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை, பொங்கல் என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வரும் நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.