புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் காரைக்கால் கடற்கரையில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N. திருமுருகன் அவர்கள் தலைமையில் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன் முன்னிலையில் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) சுப்பிரமணியன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் முனைவர். கோவிந்தசாமி, அரசு துறை அதிகாரிகள், மீன கிராம பஞ்சாயத்தார்கள், மீனவ கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் நினைவிடத்தில் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் காலங்கள் கடந்தாலும் இந்த நாள் என்பது மீளாத் துயர் என்றும், சுனமினால் இழந்த இழப்பு என்பது மிக பெரியது, இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் என்றும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுடன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.