விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு பகுதியில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, ஆறுகள் வழியாக வந்து முதலாவது நிறையும் கண்மாய் இது. இந்த புதுக்குளம் கண்மாய் சுமார் 800 ஏக்கர் பாசன வசதி உள்ள கண்மாயாகும். இந்த கண்மாய் நிறைந்து பிராண்டைகுளம், புளியங்குளம், கொண்டை நேரி போன்ற கண்மாய்கள் நிரம்பி தொடர்ச்சியாக பல கண்மாய்கள் நிரம்பும் நிலையில் உள்ளது.
புதுக்குளம் கண்மாய் கரை வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் வரை விவசாய விளைநிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவை கொண்டு செல்லவும், விவசாய விலை பொருட்களை கொண்டு வரவும் டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கரை கொஞ்சம் சற்று அகலப்படுத்தி, மண் பாதையாக இருப்பதால் கரடு முரடாக இருந்து வருகிறது.
மழை நேரங்களில் இந்த பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே இந்த பாதையை சற்று அகலப்படுத்தி டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு சீரமைத்து தார்ச் சாலை அமைத்து தரும்படி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்த புதுக்குளம், பிராண்டைகுளம் பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கரையடி அய்யனார் கோவிலில் வைத்து தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் அய்யாதுரை செயலாளர். ராமலிங்கம், மற்றும் முன்னோடி விவசாயி சங்கர சுப்பிரமணியன், வைரமுத்து, வடிவேல், அபிமன்யு, தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் செயலாளர் பி. ராமலிங்கம் நன்றி கூறினார்.