தே.பண்டரிநாதன்
(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
புதுச்சேரி அடுத்த கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
கோபாலா! கோவிந்தா! என்ற பக்தி பரவசத்துடன் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டனர்.
திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்,மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்
அதன்படி புதுச்சேரி அடுத்துள்ள கலிங்கமலையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 1-ம் தேதி பகல் பத்து திருவிழாவாக தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும்
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகல்பத்து திருவிழாவின் 10-ம் நாள், பரமபதநாதன் சேவையில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து திருமங்கையாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு துலாம் லக்னத்தில் சொர்க்கவாசல் நடை திறந்து பாமா, ருக்மணி சமேதராக
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி பரம நாதனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்க வாசலை திறந்தபோது அதிகாலை முதலே வருகை புரிந்து இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொர்க்கவாசலுக்குள் நுழைந்து
கோபாலா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கநாத பெருமாள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். இதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.