ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலம்
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரியப் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்லூரி வளாகமே விழாக்கோலத்தில் காட்சியளித்தது. மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்து தங்களது தோழர், தோழிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மாணவிகள், பேராசிரியைகள் பாரம்பரிய பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்தனர். கோலப்போட்டியில் மாணவிகள் வரைந்த வண்ணமிகு கோலங்கள் கல்லூரி வளாகத்தை அழகூட்டின. தமிழர்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்களைச் செய்து தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் பறையடித்து மற்ற மாணவ, மாணவிகளை உற்சாகமூட்டினர். மாணவர்களும், மாணவிகளும் சிலம்பம் சுற்றி தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலையை
பறைசாற்றினர். பம்பரம் விடுதல், பல்லாங்குழி ஆட்டம், நூறாங்குச்சி, ஐந்து கல் ஆட்டம் போன்றவை கிராமிய விளையாட்டுகளை நினைவூட்டின. கோலாட்டம், ஒயிலாட்டம் பொங்கல் பண்டிகையையொட்டி அம்மியில் மஞ்சள் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்தல், மருதாணி வைத்தல், பூ கட்டுதல், நாட்டுப்புறப் பாட்டு ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவிகள் உற்சாசகமாகக் கலந்து கொண்டனர்.
இதேபோல் கிராமிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டன. அதில் மாணவ, மாணவிகள் கிராமிய மக்களின் விதவிதமான ஆடைகளை அணிந்து வந்து அசத்தினர். அதில் சிறப்பாக காணப்பட்ட மாணவர்கள் அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் பட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் ரொக்கப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.