தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 44 மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் 44-மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஜோதியம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின்கீழ் பிஏபி வாய்க்கால் தூர் வாரும் பணிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, குண்டடம் ஆரம்ப சுகாதார நிலையம், – தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தேவேந்திர நகர், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காளிபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டதுடன், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, தாராபுரம் நகராட்சி ஆணையர் திருமால் செல்வம் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.