அரியலூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மேற்பார்வையாளர் காலிப் பணியிடங்கள் இல்லையென்றால், சமூக நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ஏற்கனவே ஏற்றுக்கொண்டப்படி மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு முகப்பாணை பதிவு செய்து டிஎச்ஆர் வழங்க வேண்டும் என்ற முறையை கைவிட்டு, வழக்கமான முறையே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ராஜாமணி தலைமை வகித்தார். செயலர் த.சகுந்தலா, பொருளாளர் பி.ஜோதிலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து ஒன்றியங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.