எஸ் செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி அடுத்த பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.23 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.23 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா வளாகம் மேம்படுத்தப்படும் பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்கள்.
ஆய்வு செய்த பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சுற்றுலாத் துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ரூ.23 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சுவர், வாகனம் நிறுத்துமிடம், வருகை பிளாசா-மூன்று எண்ணிக்கை, கழிப்பறை, பொருள் வைப்பறை, நுழைவுச்சீட்டு அறை, தகவல் கூடம், பாரம்பரிய விளக்கு வசதி, பிளம்மிங், கலை வேலைப்பாடு, சிலப்பதிகார கலைக்கூட புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் ,மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி என் ரவி முன்னாள் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பி எம் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.