திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருகின்ற 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா, 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்ப பல்லாக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதன் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாசில்தார் (பொறுப்பு) ஜெய பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். காவல்துறை சார்பில் ஆலயம் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஆண், பெண் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து விடவும் முடிவு செய்யப்பட்டது.
வலங்கைமான் வர்த்தக சங்கத்தின் சார்பில் திருவிழா மற்றும் புஷ்ப பல்லாக்கு காலங்களில் இரவு 12 மணி வரை கடைகளை திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும், திருவிழா மற்றும் புஷ்ப பல்லாக்கு காலங்களில் வலங்கைமான் மற்றும் தொழுவூர் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையினை தற்காலிகமாக மூட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் திமுக பேரூர் செயலாளர் பா. சிவனேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் திருஞானசம்பந்தம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் செந்தில்குமார், தீயணைப்புத்துறை சார்பில் நிலைய அலுவலர் பார்த்திபன், சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, மின்வாரியம் சார்பில் அகஸ்தியா, வருவாய் ஆய்வாளர் ஏஞ்சல்ஸ், மாரியம்மன் கோவில் அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன், வலங்கைமான் வர்த்தக சங்க தலைவர் கே.குணசேகரன், செயலாளர் ராயல் கோ. திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.