சுரண்டை தமிழக பட்ஜெட்டில் சுரண்டை நகராட்சி பகுதிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் மைய பகுதியான சுரண்டை வளர்ந்து வரும் வணிக நகரமாகும் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் தற்போது சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டும் என எதிர்பார்த்திருந்தனர். பல அலுவல்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் பட்டியலில் சுரண்டையும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவரும் அரசு அலுவலகங்கள் அமைக்கும் இடங்களை தேர்வு செய்ய பார்வையிட்டார் ஆனால் இதுவரை எந்த அரசு அலுவலகங்களும் புதிதாக அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் சுரண்டையில் 50 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என சுமார் 30 வருடங்களாகவும் சுரண்டை சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு போக்குவரத்து கழக பனிமனை அமைக்க வேண்டும் என சுமார் 40 வருடங்களாகவும் சுரண்டையில் இருந்து ஊத்துமலை வரை இரட்டை குளம் கால்வாய் அமைக்க வேண்டும் என சுமார் 55 வருடங்களாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் பல முறை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை பார்த்து வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் பேசியும் வந்துள்ளார். மேலும் தொகுதியின் டாப் டென் கோரிக்கையில் இம் மூன்று திட்டத்தையும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இம் மூன்று திட்டத்திற்கான இட வசதியையும் ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டும் சென்றுள்ளனர்
ஆகவே தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இம் மூன்று திட்டத்தையும் அறிவிக்கப்படும் என இப் பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் பட்ஜெட்டில் இத்திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை இதனால் இப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்
ஆகவே தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன் ஆகியோர் இந்த கோரிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி நடப்பு கூட்டத்தொடரில் இத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.