C K RAJAN Cuddalore District Reporter
9488471235
உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவடவாடியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவடவாடியில் நேற்று நடைபெற்ற, சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனிநபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவும், கிராம சபைக் கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், தொழிலாளர் துறை, ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம், கலைஞர் கனவு இல்லம், ஜல்ஜீவன் திட்டம், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் முதலான கூட்டப் பொருட்கள் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கிராம வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மாணாக்கர்களின் கற்றல்திறனை மேம்படுத்துவது குறித்து மாவட்ட நிருவாகம் பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இடைநிற்றல் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்பித்திட வேண்டும். மேலும், பாடங்களில் குறைவான மதிப்பெண் பெறும் மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடும் வகையில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். வருகின்ற ஆண்டு தேர்வில் 100 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெறவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்களாகிய உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் இது எதுவும் சாத்தியமன்ற எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் படிப்பில் மிகுந்த அக்கறையுடன் இருத்தல் வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பிறந்த குழந்தை முதல் 6 மாதம் வயதுடைய குழந்தைகளுக்கு இணை உணவும், 6 மாதம் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முட்டையுடன் இணை உணவும், 3 வயது முதல் 6 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இணைய உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்கள் மூலம் வளரிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பிறப்பு முதல் 72 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இத்திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவும் பொதுமக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் ஊராட்சிகள் (விருத்தாசலம்) முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.