திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.

இவ்வாலயம் தமிழகத்தின் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். திருக்கோயில்களின் தல வரலாறு , தல புராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டிடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை மறுபரிப்பு செய்வதுடன் புதிய சமய நூல்கள் மற்றும் திருக்கோயில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி என்மியப்படுத்தி நூலாக்கம் செய்திடவும், அந்த நூல்களை திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள திருக்கோயில்களில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பக பிரிவு ஒன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பக பிரிவின் மூலம் முதல் கட்டமாக தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு மறுபதிப்பு செய்து புது பொலிவுடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்ய பிரபந்தம், தமிழக கலைகள், இந்திய கட்டக் கலை வரலாறு, ஔவையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் திருக்கோயில்களில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வருவது பக்தர்களின் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்து கொண்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக புத்தக நிலையத்தை காணொளி காட்சி
மூலம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, புத்தகத்தை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேரூர் திமுக துணைச் செயலாளர் வி. சி. ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி சதானந்தம், 6-வது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் Rtn க. குமரன், தலைமை அர்ச்சகர் இரா. செல்வம் பூசாரி யார், வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.