காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் இயேசு பாதம். இவர் கிறிஸ்துவ மத போதகராக இருந்து வருகிறார். இவரது மகன் எடிசன் (17). சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2படித்து வந்துள்ளார். இந்நிலையில் எடிசன் அண்மையில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி உள்ளார்.

நேற்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் எடிசன் உயிரியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் எடிசனின் பெற்றோர் எடிசனை கண்டித்து வந்த நிலையில் எடிசன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு எடிசன் வெளியே புறப்பட்டுள்ளார். வெகு நேரம் ஆகியும் எடிசன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள மூடப்பட்ட தனியார் கல்குவாரியில் இருசக்கர வாகனம் மற்றும் செருப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால் கல்குவாரி நீரில் குதித்து எடிசன் தற்கொலை செய்து கொள்ள முயன்றதை சோமங்கலம் காவல் துறையினர் உறுதி செய்தனர்.

உடனே சோமங்கலம் காவல்துறையினர் படப்பை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கல்குவாரியில் உள்ள நீரில் எடிசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து எடிசனை நீண்ட நேரம் தேடிய நிலையில் தீயணைப்புத் துறையினர் எடிசன் சடலத்தை கல்குவாரியில் இருந்து மீட்டனர்.

எடிசன் சடலத்தை கைப்பற்றிய சோமங்கலம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *