தென்காசி,

தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசுதேவநல்லூர் எஸ்.முருகன் தலைமை தாங்கினார்.கீழப்பாவூர் அருணாசலம் தென்காசி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நல்.செல்லப் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் காலமான மக்கள் நல பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தூத்துக்குடி ராமசுப்பு, வீரசிகாமணி மகாலிங்கம், களக்காடு லெட்சுமண பாண்டியன், ஆலங்குளம் சுந்தரி, கோவிலான் குளம் முத்துப்பாண்டி, கீழப்பாவூர் மாலதி, குருவிகுளம் குருசாமி, ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து ஒன்றியங்களிலும் காலியாக உள்ள ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயலாளராக குருவிகுளம் தர்மராஜ், மாவட்ட பொருளாளராக மேல நீலிதநல்லூர் பி. லெட்சுமி, மாவட்ட துணைத் தலைவராக செங்கோட்டை பண்டாரசிவன், மாவட்டத் துணைச் செயலாளராக கீழப்பாவூர் அப்பாத்துரை, ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாநில மக்கள் நல பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 02.07.2025 அன்று திண்டுக்கல்லில் அனைத்து ஆண் பெண் மக்கள் நலப் பணியாளர்களும் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆண் பெண்
மக்கள் நலப் பணியாளர்களும் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

1990 ல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பணியமர்த்தப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மூன்று முறை டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நல பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க உத்தரவிட்டது. இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்.ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே இதற்கு மேலும் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எதுவும் செய்யாது என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் ஒன்றிணைந்து சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி சமாதியில் அனைத்து மக்கள் நல பணியாளர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் கீழப்பாவூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் மேல நீலிதநல்லூர் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் பணி புரியும் மக்கள் நலப் பணியாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் பி. லெட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *