திருச்செந்தூரில் ஆனி மாதக் குடமுழுக்கில் தமிழ்ப்பாடலுடன் வழிபாடு நடைபெற வேண்டும் – உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் வலியுறுத்தல்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
திருச்செந்தூர் திருச்சீரலைவாய் முருகன் திருக்கோயிலில், வருகிற ஆனி 23ஆம் நாள் – 7.7.2025 (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தமிழ்ப்பாடல்களுடன் நடத்தப்பட வேண்டும் என, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் திரு. மு. ஞானமூர்த்தி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
திருச்செந்தூர் என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக மதிக்கப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் மைல்கற்களாகத் திகழும் திருமுருகாற்றுப்படை மற்றும் பத்துப்பாட்டுப் பாடல்களில் இந்த திருக்கோயில் சிறப்பாகப் புடைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னொரு காலத்தில் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, முருகனின் ஆறு திருப்பதிகளையும் வாழ்த்தி பாடியுள்ள அருமையான காவியமாகும். இது பதினொராம் திருமுறை எனவும், பத்துப்பாட்டின் தொடக்கப் பாடலாகவும் தமிழ்ச் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
முருகனின் பெருமைகளை விவரிக்கும் இந்த பாடல்களில் இடம்பெறும் வரிகளை திரு. ஞானமூர்த்தி மேற்கோள் காட்டியுள்ளார்:
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! – ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான். (7)காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! – பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி! (8)
இவ்வாறு தமிழில் நிகரற்ற முருகப் பாடல்கள் இருக்கும்போது, தமிழர் பண்பாட்டின் ஆழம் புரிந்து கொள்ளாமல், அன்னிய மொழி மந்திரங்கள் ஓதப்படுவது வருத்தமளிக்கிறது எனவும், இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை மற்றும் சென்னை அமர்வுகள், கடந்த காலங்களில் நான்கு முறை தமிழ்ப்பாடல்களை கொண்டு குடமுழுக்கு விழா நடத்தத் தீர்ப்பு வழங்கியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், திருக்கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய மூன்று நிலைகளிலும், தமிழ் மொழியில் முருகனை துதிக்கும் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என, தமிழக அரசுக்கு மு. ஞானமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
அவரது கோரிக்கையின் ஊடாக, முருகனுக்கும், தமிழுக்கும் இடையிலான பரம்பரிய பிணைப்பையும், தமிழ்ப்பண்பாட்டு உரிமையையும் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.