திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூர் நீலக்குடியில் சர்வதேச யோகா தினம் 2025: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோலாகலம்!
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளரங்கத்தில் நடைபெற்ற இந்த யோகா தின விழாவிற்கு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன், பதிவாளர் இரா. திருமுருகன், தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், மற்றும் நூலகர் பேராசிரியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கேந்திரிய வித்யாலயா மற்றும் ஆக்ஸ்போர்டு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்த யோகா தினப் பயிற்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் அனைவரும் யோகப் பயிற்சிகளைச் சிறப்பாகச் செய்தனர்.
இன்று சர்வதேச யோகா தினம் 2025 விசாகப்பட்டினத்தில் பாரத பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராகேஷ், பிரதமரின் யோகா நிகழ்ச்சியில் யோகப் பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.
யோகா தினம் உலக அளவில் ஒரு முக்கியமான நிகழ்வாகும் என்றும், இந்தியாவில் வளர்ந்த இந்த கலை இன்று உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளும் யோகா தினத்தைக் கொண்டாடுகின்றன என்றும் துணைவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார். “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தினமும் யோகா பயிற்சி செய்வது உடல் மற்றும் மனதை வலிமைப்படுத்தும் என்றும், நல்ல எண்ணங்களை உருவாக்கி நல்ல செயல்களாக வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பத்து ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் M.Sc. Yoga என்ற இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
யோகா தின நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.