தாராபுரத்தில் திமுகவில் உள் கட்சி குழப்பம் வெடிப்பு — ஒன்றிய செயலாளர் மீசை துரைசாமியின் பதவியை எதிர்த்து உறுப்பினர்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் திமுகவில் கடும் உள் குழப்பம் வெடித்துள்ளது. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள், பொதுப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இடையே பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

இதுவரை தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளராக இருந்த எஸ்.வி. செந்தில்குமார், தனது நிர்வாகத் திறமையால் கட்சியின் பல்வேறு செயற்பாடுகளை ஒற்றுமையாக முன்னெடுத்து வந்தார். மாவட்டம் முழுவதும் அவர் நேர்மையான செயல்பாட்டுக்காக நல்ல பெயர் பெற்றிருந்தார்.

ஆனால் அண்மையில் தாராபுரம் திமுக ஒன்றியம், கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில், தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் ஆதரவாளரும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி திமுக தலைவருமான கே.கே. ‘மீசை’ துரைசாமி நியமிக்கப்பட்டார்.

துரைசாமி பொறுப்பேற்றதிலிருந்து, கட்சிக்குள் தொடர் சண்டை, குழப்பம், சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. அவரின் நிர்வாகம் குறித்து கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.


கட்சியினரிடம் தான் தான் முதல்வர் போல் ஆட்சி செய்யும் விதத்தில் நடந்துகொள்வதாகவும், பெண் உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் கட்சியின் பல உறுப்பினர்கள் துரைசாமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், பெரமியம் ஊராட்சியில் நடைபெற்ற முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தார் சாலை பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். அந்தவேளையில், சம்பந்தப்பட்ட பகுதியில் கட்சியினர் களத்தில் குதித்து,
“கே.கே. துரைசாமியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்!” எனக் கோரியும், அவரது ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மற்றும் பேச்சு வார்த்தைகளால் கீழ் ஜாதிக்காரர்கள் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தொடர்ந்து மனஉளைச்சலுக்குள்ளாகி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், “துரைசாமி பதவியில் தொடர்ந்தால், மாம்பாடி, பெரமியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள திமுக உறுப்பினர்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்றுவிடும் சூழலை துரைசாமி உருவாக்கியுள்ளதாக அமைச்சர் கயல்விழியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து தாராபுரம் முழுவதும் திமுக உள் குழப்பம்
தலை விரித்து ஆடுகிறது.

மேலும் பொதுமக்கள் மத்தியில் “இதுபோன்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் ஓட்டு போட்டோமா?” என கேள்விகள் எழுந்து வருகின்றன.

தற்போது, இச்சூழ்நிலையை மாநில திமுக தலைமை கவனத்தில் எடுத்துக் கொண்டு, முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து கட்சியின் ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்துமா கேகே துரைசாமியை ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் வேறு ஒரு நல்ல கட்சி நிர்வாகிக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்குமா என
திமுக நிர்வாகிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *