பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில், இப்போது மாம்பழ ஹர்வெஸ்ட் சீசன் உச்சத்தில் உள்ளது. எனினும், சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையைக் கவனத்தில் கொண்டு, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி ஒரு முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், “மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவாக வீழ்ந்துள்ளது. முக்கியமாக, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த ஆண்டில் கொள்முதல் செய்யும் அளவை குறைத்ததால், விவசாயிகள் தங்கள் உற்பத்தியை வெகுஇழப்புடன் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இது விவசாயிகளின் வாழ்க்கைநிலையை பெரிதும் பாதிப்பதுடன், தேசத்தின் உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்:
- ஆஷா திட்டத்தின் கீழ் சந்தை தலையீட்டு விலை வழங்கல்:
விவசாயிகளுக்கு நியாயமான விலை உறுதி செய்ய, மத்திய அரசின் Agricultural Scheme for Price Support (AASHA) திட்டத்தின் கீழ் உடனடி தலையீட்டுத் தொகை வழங்க வேண்டும். - குளிர்பதன சேமிப்பு மற்றும் உற்பத்தி அலகுகள் அமைத்தல்:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் (MIDH) கீழ், மாம்பழக்கூழ் உற்பத்தி மற்றும் குளிர்சாதன வசதிகள் கொண்ட உள்கட்டமைப்புகள் மாவட்டத் தவணைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். - நேரடி நிதி உதவி:
பெரிய இழப்புகளை சந்திக்கும் விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். - GST குறைப்பு:
தற்போது மாம்பழக் கூழ் தயாரிப்பில் 12% சரக்கு மற்றும் சேவைவரி (GST) விதிக்கப்பட்டுள்ளது. இதை 5% ஆக குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உற்பத்தியாளர்களுக்கும், சந்தை விற்பனையிலும் நன்மை தரும். - சந்தை விலை வேறுபாட்டை 50:50 விகிதத்தில் பகிர்வு:
நடைமுறையில் உள்ள விற்பனை விலைக்கும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட தலையீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை மத்திய மற்றும் மாநில அரசு சமமாக பகிர்ந்து சுமக்க வேண்டும்.
இத்தகைய திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய மு.ஞானமூர்த்தி, “மாம்பழ விவசாயிகளின் உழைப்பும், வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவின் பெருமைக்குரிய மாம்பழத் தொழில்துறை வீழ்ச்சியடைந்துவிடும் அபாயம் உள்ளது” எனக் கூறினார்.