ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஓடை புறம்போக்கை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைமை செயலாளர், கலெக்டர், அந்தியூர் தாசில்தார் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தியூர் கொல்லபாளையத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பிரம்மதேசம் அருகேயுள்ள சின்னக்குளத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 1.5 ஏக்கர் நீர்நிலை ஓடைப் புறம்போக்கை, அதேப் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
இது சம்பந்தமாக, மாவட்ட கலெக்டர், அந்தியூர் தாசில்தார் உள்ளிட்டோருக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கை அகற்றுவதில் வருவாய்த்துறை தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
எனவே, காலந்தாழ்த்தாமல் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாடி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.