தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று (08/07/2025) தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கனிமொழி கருணாநிதி எம்.பி; ஓரணியில் தமிழ்நாடு என்று முதலமைச்சர் துவங்கி வைத்துள்ள உறுப்பினர் சேர்க்கக்கூடிய முனைப்பு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி வாக்காளர்களில் 30 சதவீதத்தை 40 நாட்களில் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. இப்போதே பலர் தொகுதிகளில் 30 சதவிகிதத்தை அடைந்து விட்டனர்.
பெரியார் கொள்கையைப் பின்பற்றும் தாங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
என்னுடைய நம்பிக்கை என்பதைத் தாண்டி மக்களுடைய நம்பிக்கை அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு வந்திருக்கும் ஐந்து லட்சம் மக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்தோம். எந்த பிரச்சினையும் இல்லாமல் வந்து போக வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருந்தது.
இந்த குடமுழுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சூரசம்ஹாரமாக இருந்தாலும் சரி மற்ற நிகழ்வாக இருந்தாலும் சரி ஏற்பாடுகளை நேரில் சென்று மக்களுக்கு வசதிகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து செய்வோம். மக்கள் பிரதிநிதியாக என்னுடைய கடமை இதை நான் செய்ய வேண்டும்.
இது திருச்செந்தூர் கோவிலுக்கானது மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் சரி என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய முதல் கடமை.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிடப் போகிறீர்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே, ஏங்க குழப்பத்தை என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.