கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வருகின்ற 15.07.2025 முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளதையொட்டி, கரூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. கரூர், வாங்கப்பாளையம், சோழன் நகரில் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வருகின்ற 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் கடைக்கோடியில் வசிப்பவருக்கும் அவர்கள் அன்றாடம் அனுகும் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மொத்தம் 179 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்கள் வரும் 15.07.2025 முதல் 15.09.2025 வரை நடைபெறவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 101 முகாம்களும், நகர்புற பகுதிகளில் 78 முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் நகர்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

மேலும் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்கள் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் கடந்த 07.07.2025 முதல் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் கரூர் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என நகர்புற பகுதிகளில் 210 தன்னார்வலர்களளும், ஊரக பகுதிகளில் 251 தன்னார்வலர்களும் என மொத்தம் 461 தன்னார்வலர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து கரூர், வாங்கப்பாளையம், சோழன் நகரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள அரசு துறைகளின் சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப.தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் வெ. கவிதா, வட்டாட்சியர்கள் குமரேசன், மோகன்ராஜ், தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *