திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது.
பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டெல்லா மேரி முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சங்க கால நாணயங்கள் முதல் குடியரசு இந்திய நாணயங்கள் வரை காட்சிப்படுத்தி விளக்கினர்.
புதை படிமங்கள் வரலாறு குறித்து இளம்வழுதி பேசுகையில்,கல்லான உயிரினங்களை
புதை உயிர் படிமம் என்பர்.புதை உயிர் படிமம் என்பது,இறந்த உயிரினங்களின் எச்சங்கள், மண்ணில் புதைந்து, தாதுக்களால் நிரப்பப்பட்டு, கல்லாக மாறும் செயல்முறையே புதைபடிவமாதல் ஆகும் தொல்லுயிரியல் ஆய்வாளர்களுக்கு, புதை படிமங்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, புவியின் வரலாறு, மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றிய தகவல்களை அளிக்கின்றன.
புதைபடிமங்கள் பல வடிவங்களில் காணப்படுகின்றன, இதில் எலும்புகள், பற்கள், ஷெல்கள், இலைகள், கால் தடங்கள் மற்றும் சில சமயங்களில் மென்மையான திசுக்களின் படிமங்களும் அடங்கும்.
எடுத்துக்காட்டாக டைனோசர்களின் எலும்புகள் முட்டைகள் புதைபடிமங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது அந்த உயிரினத்தின் தோற்றம் மற்றும் வாழ்வியல் முறை பற்றிய தகவல்களை அளிக்கிறது.கடல்வாழ் உயிரினங்களின் ஷெல்கள் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டு, அந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் இருந்ததை அறிய உதவுகின்றன.
சுருக்கமாக, புதை உயிர் படிவங்கள், கடந்த கால உயிரினங்கள் மற்றும் புவியின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன என்றார்.