திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம், மாணிக்க மங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு நிதிகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறையால் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூடுதல் கலெக்டர் பல்லவி வர்மா அவளிவநல்லூர் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள், 17.61 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், ரூ.9.7 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் மற்றும் சுமார் 43 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.63 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு கல்வெட்டுகள் ஆகிய பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் திருவோணமங்கலம் மற்றும் மேல அமராவதி பகுதிகளில் தலா ரூ.17.61 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடங்கள், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பழது நீக்கும் பணிகள் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள் பணிகள், கண்டியூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நர்சரி ஆகியவற்றினையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, ஒன்றிய பொறியாளர்கள் சண்முகசுந்தரம், சுகந்தி, பணி மேற்பார்வையாளர்கள் பிரபாகரன், முருகையன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *