கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் சுற்றுப்புறங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
மேலும் புவி வெப்பமயமாதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றமடைதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளால் மனிதர்களும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டு பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்றனர். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கடைகளுக்கு பெற்றோர்கள் செல்லும் பொழுது துணியிலான பையை எடுத்துக்கொண்டு பொருட்களை வாங்க வேண்டும் என தங்கள் பெற்றோரிடம் கூற வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
சுற்றுச்சூழல் சார்ந்து நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் , மரக்கன்றுகளை தங்களுடைய இல்லங்களில் நட வேண்டும் எனவும், அவ்வாறு மரக்கன்று நடுவதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்று பேசினார். மாணவர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக ஓவியங்கள் வரைந்தனர்.