எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம்

சென்னை மணலி சிபிசிஎல் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லயம்ஸ். இவருடைய மகன் தருண்குமார்(17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மணலி நேருஜி தெருவை சேர்ந்தவர் ஜான்சாலமன். இவருடைய மகன் இம்மானுவேல்(17) இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நண்பர்களாகிய தருண்குமார் மற்றும் இம்மானுவேல் இருவரும் காலை 7 மணியளவில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகருக்கு அருகே உள்ள பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் உள்ள கடற்கரைக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றனர். கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தருண்குமாரும், இம்மானுவேலும் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர்.

உடனடியாக சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கடலில் மாயமான சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் கடலில் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஆபத்தான வகையில் கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எண்ணூர் கடற்கரையில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *