பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற பருத்தி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைகளுள் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பருத்தி விளையும் மாவட்டம் என்பதும் ஒன்றாக கருதப்படுகின்றது. தற்போது பருத்தி விளைவித்த பல விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு சென்று விட்டதாக வேளாண்மைத்துறையினர் தெரிவிக்கின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் பொருத்தவரை இந்த ஆண்டு 5,068 ஹெக்டரில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது.
பணப்பயிரான பருத்தியினை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்திட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
விவசாயிகளுக்கு வி.பி.டி 1, மற்றும் வி.பி.டி 2 என்ற இரண்டு பருத்தி ரகங்கள் வெளியிட்டுள்ளது. வி.பி.டி 1 ரகத்தின் மகசூல் திறன் 1,986 கிலோ/ஹெக்டர் ஆகும். தமிழ்நாட்டின் மானாவாரி, குளிர்கால பாசனம் மற்றும் நெல் தரிசு நிலங்களுக்கு பருத்தி ரகம் வி.பி.டி 2 வெளியிடப்பட்டது. இந்த ரகம் அதிக அடர்த்தி நடவு முறையின் கீழ் மகசூல் திறன் 2,132 கிலோ/ஹெக்டர் ஆகும். இது இயந்திர அறுவடைக்கு ஏற்ற கச்சிதமான ரகமாகும். இதனால் 1 ஏக்கர் பருத்தியை 45 நிமிடங்களில் அறுவடை செய்யலாம். இந்த விதைகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து, பருத்தி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு வி.பி.டி 2 பருத்தி விதைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சோமசுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர் பாபு, தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன், ஸ்பீக் & கிரீன் ஸ்டார் உர நிறுவன (லிமிடெட்) விழுப்புரம் மண்டல மேலாளர் ராஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் பாரதி குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, துணை இயக்குநர் (வேளாண்மை பயிற்சியாளர பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.