மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
உயிர்போகும் வரை அன்பர்களோடு உண்ணாவிரதம் இருந்து முன்னோர் கட்டியதை காப்போம்:-
தருமபுரம் ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிக சுவாமிகள் இலவச மகப்பேரு மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடைவீதியில் 1951-ஆம் ஆண்டு ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறவேண்டுமென்ற நோக்கில் தருமை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அவரது தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு அப்போதைய கவர்னரால் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர், 25-வது குருமகா சன்னிதானம் காலத்தில் அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவால் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக சுவாமிகள் இலவச மருத்துவ நிலையம் என்ற பெயரில் அந்த மருத்துவமனை தொடங்கிவைக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கிவந்தது. இந்த இடத்துடன் மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் ஆதீனம் வழங்கியிருந்தது. காலப்போக்கில் கட்டடம் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்ததை அடுத்து இலவச மருத்துவமனை மூடப்பட்டது. அதனையடுத்து தற்போதைய 27-வது குருமகா சன்னிதானம் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இலவச மருத்துவமனையை மீண்டும் ஆதீனம் சார்பில் பராமரிக்க நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்த தருமையாதீனம், முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பான இலவச மருத்துவமனையை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம் என 2023-ஆம் ஆண்டு அக்.6-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் அங்கு பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், அந்த இடத்தில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில்;, புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணியை மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி வந்தபோது, காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முகநூலில் பதிவிட்டுள்ள தருமபுரம் ஆதீனகர்த்தர், மயிலாடுதுறையில் 24-வது குருமகா சந்நிதானம் காலத்தில் அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜா திறந்துவைத்த இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப்போவதாக முன்பு தகவல் வந்தபோது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பெற்றது. மீண்டும் அதே இடத்தில் நடைபெறவுள்ள பணிகளை நிறுத்த வேண்டும். இல்லையெனில் உயிர்போகும் வரை அன்பர்களோடு உண்ணாவிரதம் இருந்து முன்னோர் கட்டியதை காப்போம் என தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை மட்டுமின்றி நாடு முழுவதும் பக்தர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.