திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார், துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தேர்தல் பிரிவு செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் வக்கீல் சரவணா செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
முன்னதாக குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் வரவேற்றார். கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:- தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறிக் கொண்டு வருகிறது.
மோடியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகித்தது, ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணியை உறுதி செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோளோடு தோள் நின்ற ஓ.பன்னீர்செல்வம் அணி, அமமுகவை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்ததால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.
இனி நாம் நமது வலிமை என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க் கட்சித் தலைவராக கூட வராத நிலையை ஏற்படுத்த வேண்டும்.என அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், நன்னிலம் பாலாஜி, கதிர் செல்வம், வலங்கைமான் விவேக் (எ) விவேகானந்தம், விளத்தூர் ஆர். சிவா, நகரச் செயலாளர்கள் வலஙகை வி.ஆறுமுகம், நன்னிலம் வி.விவேகானந்தன், பேரளம் கே.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் நன்னிலம் கே.சிங்காரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் நகரச் செயலாளர் ஆரோக்கியா ஆனந்த் நன்றி கூறினார்.