திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், கீழ அமராவதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் மோகனச்சந்திரன், எம் எல் ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அக்.2 ம்தேதி டெல்டா மாவட்டங்களின், கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து, விவசாயிகளால் உற்பத்தி செய்யக்கூடிய நெல்மணிகளை எந்தவிதமான சேதாரமுமின்றி கொள்முதல் செய்வது முதல், உலைக்கு செல்லும் வரை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவுப் படுத்துவதற்காக வட்டம் வாரியாக 12 மண்டல மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகியுள்ள நெல் மணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்கெனவே கூடுதல் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பற்றாக்குறையினால் புதிதாக மூன்று கேப் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8000 டன் அளவிற்கு நெல் மாவட்டங்களுக்கு செல்வதற்காக ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாக கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் பாதுகாப்பாக சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்தார்