ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் வடக்கு தெருவில் உள்ள ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மேளதாளம் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். பொங்கல்
திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்று வந்தது.
பருவமழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நவதானியங்களை வைத்து விரதம் இருந்து முளைப்பாரியை வளர்த்தனர். பெண்கள் முளைப்பாரியை பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கத்தின் முன்பு வைத்து கும்மியடித்து, தலையில் வைத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் ஜிப்லா மேளம், தாரைதப் பட்டை வானவேடிக்கையுடன் சென்றது. இதில் ஆண்களும், பெண்களும் ஆடி பாடி சென்றனர். ஊர்வலம் கடைத்தெரு, நாடார் பஜார், மெயின் ரோடு, பிள்ளைமார் தெரு ,ஐயர் தெரு வழியாக இருளப்பசாமி கோவிலை வந்தடைந்தது.
பின்னர் கோவிலை வலம் வந்து அரியநாச்சியம்மன் கோவிலுக்கு சென்று முளைப்பாரியை வைத்து பெண்கள் கும்மியடித்தனர் பின்னர் முனளப்பாரியை ஆற்றில் கரைத்து வழிபட்டனர்