திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
கொரடாச்சேரி அருகே பாசன வடிகால் வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளாததன் விளைவாக சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்காமல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயரிர்களை மழைநீர் சூழ்ந்தது: அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்ததையடுத்து அதிகாரிகள் காவல்துறையினர் வருகையால் பரபரப்பு…
கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் நேற்று இரவு பெய்த லேசான மழைக்கே அங்குள்ள வடிகால்வாய்க்காலில் தண்ணீர் வடிய வழியின்றி சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பியரை சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா நெற்சாகுபடியானது சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்வது வழக்கம். இதன்படி இவ்வாண்டும் மாவட்ட வேளாண் துறை மூலம் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணியை மேற்கொள்வதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இம்மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சம்பா நெல் நடவு பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அங்குள்ள பாண்டவையாற்றில் இருந்து பாசனத்திற்கு கண்கொடுத்தவணிதம் வடிகால்வாய்க்கால் மூலம் பாயும் தண்ணீர் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்கவும், பெருமழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் வடிய ஏதுவாக வடிகால்வாய்க்காலை தூர்வாரிதரவேண்டுமேன கடந்த 4 ஆண்டுகாலமாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தனர்.
ஆனால் விவசாயிகளின் கோரிக்கையினை அதிகாரிகள் செவிமடுத்து கேட்க முன்வராத நிலையால் நேற்று இரவு லேசாக பெய்த மழைக்கே தாக்குபிடிக்கமுடியாமல் கண்கொடுத்தவணிதம் வடிகால்வாய்க்காலில் மழைநீர் வடிய வழியின்றி ஆங்காங்கே சாகுபடி செய்யப்பட்ட 20 நாட்களே ஆன சம்பா இளம் நடவு பயிர்களை சூழ்ந்தது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்களை மழைநீர் சூழந்ததால் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்ததோடு, உடனடியாக அரசு போர்க்கால அடிப்படையில் கண்கொடுத்தவணிதம் வடிகால்வாய்க்காலை தூர்வாரி தண்ணீரை வடியவைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உடனடியாக தண்ணீரை வடியவைக்காவிடில் இளம் பயிர்கள் அழுகி விவசாயிகள் பெருத்த பொருளாதார இழப்புக்கு ஆளாக நேரிடும் என அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் போராட்டத்தை முன்னேடுக்க விவசாயிகள் கண்கொடுத்தவணிதம் பகுதியில் ஒன்று திரண்டதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
விவசாயிகள் ஒன்று கூடுவதை அறிந்த கொரடாச்சேரி காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தூர்வாரி தரப்படும் என உத்தரவாதம் அளித்து விவசாயிகளை கலைந்துசெல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதனிடையே கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் தற்போதைய சம்பாநெற்பயிர்கள் பாதிப்புக்கு தூர்வாராதது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணமாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுவது வடிகால்வாய்க்கால் பகுதியில் உள்ள தண்ணீரை முறைப்படுத்தும் தடுப்பு பலகையை பராமரிக்க அரசு ஊழியர்களை நியமிக்காததோடு, சட்ரஸ் பகுதியினை பூட்டுபோட்டு பூட்டிவைத்துள்ளனர். இதனால் தண்ணீர் முறைப்படுத்த வழியின்றி சாகுபடி வயல்பரப்பினை சூழ்ந்ததாக குற்றம்சாட்டிய விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: விவசாயி செந்தில், கண்கொடுத்தவணிதம்.