பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று (02.10.2024) நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் (11.10.2025 ) 121 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களிடம் உரையாடினார்கள்.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, கலந்துகொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுடன் உரையாடிய நிகழ்வை கண்டு களித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது, இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் (Derogatory Caste Name) கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது,
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்து, அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் ஈடுபடுத்தக்கூடாது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் (RSETI) வாயிலாக வழங்கப்படும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிக்கு தகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்துதல், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு பெருமைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன்,வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வேளாண்மை இணை இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வம், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.